இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார் அதனை தொடர்ந்து தீர்மானம் நிறைவேறியது
முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றசாட்டி, அங்கிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
தீர்மானத்தை கொண்டுவந்த பின் பேசிய ஸ்டாலின்
அகதிகளாக வரும் மக்களை மதம் சார்பாக பிரித்து பார்ப்பது ஏற்க முடியாது. எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்த தனி தீர்மானத்தை கொண்டுவந்துள்ளேன்” என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டதிருத்த மசோதா என்றால் என்ன?
பொதுவாக வெளிநாடுகளிலிருந்து வந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்தியக் குடிமகனாக முடியாது. அவர்கள் பொதுவாக நாட்டைவிட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுவார்கள்.
ஆனால் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினர்களுக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், இந்த சட்டத் திருத்தம் அவர்களை இந்தியக் குடிமகனாக அங்கீகரிக்க வழிவகை செய்கிறது.
1955ல் கொண்டு வரப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரும் சட்ட திருத்தம்தான் இந்த இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஆகும்.
இந்த பழைய சட்டத்தின் படி இந்தியாவில் பிறந்தவர்களும் இந்தியாவிற்கு முறையாக அனுமதியோடு வந்து 11 வருடங்கள் வாழ்ந்தவர்களும் மட்டுமே இந்திய குடியுரிமை பெற முடியும். முறையின்றி இந்தியாவில் குடியேறிய யாரும் இந்தியாவில் குடியுரிமை பெற முடியாது.
ஆனால் தற்போது பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஹிந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள்,பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் குறைந்தது 6 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்பதே இந்த திருத்தம். முன்பெல்லாம் முறையின்றி இந்தியாவில் குடியேறினால் அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள். ஆனால் புதிய சட்டப்படி அரசு அவர்களை கைது செய்யாது அவர்களுக்கு குடியுரிமை அளிக்கும்.
மேலும் கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் குடியேறியவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இதில் இஸ்லாமியர்களை சேர்க்கவில்லை
மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள். இந்திய அரசமைப்பு மதத்தின் பெயரால் ஒருவரை பாகுபாட்டுடன் நடத்தக் கூடாது என்கிறது. அதுமட்டுமல்லாமல் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது. ஆனால், இது மதபாகுபாட்டிற்கு சட்ட அங்கீகாரம் தருகிறது இந்த சட்டம் திருத்தம் என்கிறார்கள் உதாரணமாக 2013 ல் ஒரு இந்துவும் இஸ்லாமியரும் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் முறையின்றி குடியேறி இருந்தால் அதில் இந்துவுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும். மாறாக இஸ்லாமியர் சிறைக்கு செல்வார் அல்லது நாட்டை விட்டு செல்வார். இதுதான் இந்த மசோதாவை எதிர்க்கப்பட காரணம்